1. மழைத்துளி கோள வடிவம் பெறுவது ஏன் ?
மேகத்திலிருந்து மழைத்துளி விழும்போது அதன் பரப்பு இழுவிசை காரணமாக அதன் புறப்பரப்பு மிகச் சிறியதாக குறைகிறது . எல்லா வகையான முப்பரிமான வடிவங்களிலும் கோள வடிவத்திகுதான் புறப்பரப்பு மிகக்குறைவு . இதன் காரணமாகத்தான் மழைத்துளி கோள வடிவம் பெறுகிறது .
2. கடல்நீர் ஏன் உப்புக் கரிக்கின்றது?
காலங்காலமாக குன்றுகளில் இருந்தும் மலைப்பகுதிகளில் இருந்தும் உற்பத்தியாகும் ஆறுகள் நீரில் கரையக்கூடிய தாது உப்புகளை அடித்து வந்து கடல் நீரில் சேர்த்தன . இப்போதும் சேர்கின்றன. கடலில் வந்து சேர்க்கப்பட்ட தாது உப்புகள் கடல்நீர் ஆவியான பொழுதிலும் வெளியேறாமல்
உப்புத்தன்மையை அதிகரித்துக் கொண்டே வந்தன. இதனால் கடல்நீர் உப்புக் கரிக்கின்றது.
3. பச்சை இலைகள் காய்ந்தபின் ஏன் நிறமாறுகிறது?
இலைகளில் பச்சையம் [Chlorophyll] என்ற நிறமி அதிக அளவில் இருப்பதால் பச்சை நிறமாக தோன்றுகிறது . இவை காயும் போது ஆக்சிஜன் ஏற்றத்தால் பச்சையம் என்ற நிறமி மறைந்து [Xanthophyll] மஞ்சயம் என்ற நிறமி தோன்றுகிறது . இதனால்தான் காய்ந்த இலை பழுப்பு / மஞ்சள் நிறமாக மாறுகிறது
4. ஓடும் பேறுந்து நிற்கும் போது, ஏன் முன்னோக்கி சாய்கிறோம்?
நகரும் பொருள்கள் அனைத்தும் இயக்க ஆற்றலை பெற்றிருக்கும் . ஓடும் பேருந்தும் , அதில் பயணம் செய்பவர்களும் இயக்க ஆற்றலை பெற்றிருப்பார்கள் .
ஓட்டுனர் திடீரென தடையை [ Break ] பயன்படுத்தும் போது பேருந்தின் இயக்க ஆற்றல் அனைத்தும் சாலையில் சக்கரம் உராய்வதன் மூலம் வெப்பமாக மாறி குறைகிறது .
அதனால், பேருந்து நிற்கிறது . ஆனால் , அதில் பயணம் செய்பவர்கள் இயக்க ஆற்றலில் இருப்பார்கள் . அதனால் சற்று முன்னோக்கி சாய்ந்து மீண்டும் பழைய நிலை ஆற்றலுக்கு வருவார்கள் .
5. நிலத்தடி நீர் (Ground Water) எப்படி தாவரங்களுக்கு மேலே எப்படி வருகிறது?
தாவங்களின் வேர்களிலிருந்து இலை வரைஅனைத்து பாகங்களிலும் ஏராளமான நுண்ணிய குழாய் அமைப்புகள் [Tubular Cells] இருக்கின்றன. தரையில் இருக்கும் நீர் இந்த நுண்ணிய குழாய்களின் வழியே தந்துகிப் பெயர்ச்சி [ Capillary action ] முறையில் புவிஈர்ப்பு விசையையும் மீறி தாவங்களின் மேலுள்ள அனைத்து பாகங்களுக்கும் செல்கிறது. சிம்னி விளக்கிலுள்ள திரியில் மண்ணெண்ணெய் வருவதும் இதே முறையில்தான்.
6. நிலவைச்சுற்றி ஒளிவட்டம் தெரிவது ஏன்?
நீர்த் துளிகளை சுமந்த மேகங்கள் அதிகமாக வளிமண்டலத்தில் இருக்கும்போது நிலவைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும். மேகத்திலுள்ள சிறு சிறு நீர்த்துளிகளின் வழியே நிலவின் ஒளி செல்லும்போது , ஒளிக்கதிர்கள் முழு அக எதிரொளிப்பு அடைகின்றன. நிலவிலிருந்து நம் கண்களை வந்தடையும் இந்த கதிர்கள் ஒரே கொணத்திசையிலுள்ள நீர்த்துளிகளில் முழு அக எதிரொளிப்பு அடந்தவையாகும். இதனால் தான் நிலவைச்சுற்றி ஒளிவட்டம் தெரிகிறது.
நிலவைச்சுற்றி வட்டம் இருந்தால் நிலா கோட்டை கட்டிவிட்டது என்று சொல்வார்கள். எட்ட கோட்டை கட்டினால் கிட்ட மழை என்று மழை விரைவில் வரும் என்பதை நம் முன்னோர்கள் கணித்தனர்.
7. வெங்காயம் வெட்டும் போது கண்ணில் கண்ணீர் வருவது ஏன்?
வெங்காயம் வெட்டும்போது அதன் இதழ்களில் காணப்படும் ஆலினேஸ் என்ற நொதி பொருளும் , ப்ரோப்பினி சிஸ்டைன் சல்பாக்சைடு என்ற பொருளும் வினைபுரிந்து ப்ரோபின் சல்பினிக் அமிலமாக மாறுகிறது .
இந்த அமிலம் எளிதில் ஆவியாகி காற்றில் கலந்து நம் கண்களை அடைந்து உறுத்துகிறது . இதன் விளைவாக கண்ணீர் சுரப்பியிலிருந்து நீர் சுரந்து வெளியேறுகிறது .
8. விக்கல் (Hiccup) ஏன் வருகிறது?
மனிதனின் உடலில் மார்பையும் , வயிற்றுப்பகுதியையும் பிரிக்கும் மெல்லிய தகடு போன்ற சவ்விற்கு உதரவிதானம் என்று பெயர். இந்த சவ்வு சுவாசத்திற்கு மிகவும் அவசியம். இந்த உதரவிதானம் ஒழுங்கற்ற முறையில் சுருங்கி விரிவதால் விக்கல் ஏற்படுகிக்றது .
நுரையீரலுக்குள் காற்று விரைவாக செல்லும்போது மூடி இருக்கும் குரல்வளை நாண்களில் எழும் அதிர்வையே விக்கல் என்கிறோம். அவசரமாக உண்ணுவதும் , அளவுக்கு மிஞ்சி குடிப்பதும் இதற்கு காரணம்.
9.மின்மினிபூச்சி ஒளிர்வது ஏன்?
மின்மினி பூச்சிக்கு நுரையீரல் கிடையாது. இப்பூச்சி சுவாசத் துளைகளின் வழியே செல்லும் சுவாசக்குழல் மூலம் சுவாசிக்கிறது. மின்மினிப் பூச்சியின் அடிவயிற்றுப் பகுதியில் தனிச்சிறப்பு மிக்க செல்களில் லூசிபெரின்[Luciferin] என்ற வேதிப்பொருள் காணப்படுகிறது.
இந்த செல்களுடன் சுவாசக்குழல் தொடர்பு கொண்டுள்ளது . எனவே ஆக்சிஜன் லூசிபெரினுடன் வினைபுரிந்து ஒளியை தருகிறது.
ஒளியை உமிழ்வது உயிர் வேதியல் செயலாகும். இச்செயலுக்கு லூசிபெரேஸ் என்ற நொதி வினைவேக மாற்றியாக செயல்படுகிறது. இச்செயல் நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது
மின்மினி பூச்சிகள் பச்சை, சிவப்பு , மஞ்சள் ,ஆரஞ்சு என பல வண்ணங்களில் ஒளியை உமிழ்கின்றன.
10. தொட்டால் சினுங்கி சுருங்குவது ஏன் ?
![]() |
தொட்டால் சினிங்கி |
தொட்டான் சுருங்கியின் இலைகள் கூட்டு இலைகளாக இருக்கிறது. இந்த கூட்டு இலையின் காம்பிற்கு அடியில் [ தண்டுடன் ஒட்டியுள்ள பகுதி ]சற்று பருத்து இருக்கும். முண்டுகளில் தனித்தன்மை வாய்ந்த மெல்லிய சவ்வு செல்கள் அதிகளவில் இருக்கிறது.
இந்த செல்லினுள் நீர் மூலக்கூறுகள் எளிதில் சென்று வர முடியும். இந்த முண்டுகளில் நீர் நிறைந்து இருந்தால், இலைகள் விரிந்து இருக்கும். இலையின் மீது தொட்டால், அந்த முண்டுகளில் இருக்கும் செல்கள் நீரை இழுக்கின்றன.
இதனால் இலைகளை தூக்கி நிறுத்தவும் விரிந்த நிலையில் வைக்கவும் முடிவதில்லை. இதனால்தான் தொட்டால் சினுங்கியின் இலைகள் சுருங்கி பின் விரிகிறது. இலைகள் இயல்பு நிலைக்கு வர 15 முதல் 30 நிமிடங்கள் ஆகலாம்.
சுருக்கமாக சொன்னால் இலைக்காம்பில் சவ்வூடு பரவல் அழுத்த வேறுபாடே இதற்கு காரணம்
11. பால் பொங்குவது ஏன் ?
பால் ஒரு திரவப்பொருள் . பாலில் புரதம் , கொழுப்பு , சர்க்கரை , மற்றும் தாது பொருள்கள் அடைங்கியுள்ளன . பாலை சூடேற்றும் போது அதில் உள்ள நீர் நீராவியாக மாறி வெளியேறும் .
அதே சமையம் பாலில் உள்ள புரதம் , கொழுப்பு பொருள்கள் பிரிகை அடைந்து இலேசாகி பாலின் மேற்பரப்பில் ஏடு போல படியும் . தொடர்ந்து பால் சூடேறும் போது நீராவியை வெளியேற விடாமல் பாலின் மேற்பரப்பில் உள்ள ஏடு தடுக்கும்.
நீராவியானது அதிகமாக அதிகமாக மேற்பரப்பில் உள்ள ஏடை தூக்கிக்கொண்டு வெளியேறும் . இதையே நாம் பால் " பொங்குது " என்கிறோம் . எனவே மேலே படியும் ஏடினை நீக்கிக்கொண்டே இருந்தால் , நீராவி தடையின்றி செல்லும் பாலும் பொங்காது.
12. கால்கள் மரத்துப்போவது ஏன் ?
கால்களை மடக்கி உட்காரும்போது இரத்தம் ஓட்டம் சிறிதளவு பாதிக்கப்படுகிறது. இரத்த ஓட்டம் குறைவதால் திசுக்களுக்கு தேவையான ஆக்சிஜன் குறைகிறது.
இதனால் சுறுசுறுவென குத்துவது போலவும் , கால்கள் கனமாகவும் , சத்து இல்லாதது போலவும் தோன்றுகிறது. இதை கால் மரத்துப்போதல் (Numbness of the leg) என்கிறோம். சில நிமிடங்களில் இரத்த ஓட்டம் சீரானவுடன் இது உடனே மறைந்து விடும்
13. இரவில் விளக்கு வெளிச்சத்தை நோக்கி பூச்சிகள் வருவது ஏன் ?
பூச்சிகள் இரவு நேரத்தில் விளக்கு வெளிச்சத்தை நோக்கி வருவதை நாம் பார்த்திருப்போம். அதற்கான காரணங்களை அறிந்து கொள்வோம்.
பூச்சிகள் நேர்மறை ஒளிக்கதிர் பூச்சிகள்[Positive phototaxis insects], எதிமறை ஒளிக்கதிர் பூச்சிகள் [Negative phototaxis insects] என இரண்டு வகைகளாக இருக்கின்றன.
Negative phototaxis பூச்சிகள் விளக்கு வெளிச்சத்திலிருந்து விலகியே இருக்கும். உதாரணம் :கரப்பான்பூச்சி
Positive phototaxis பூச்சிகள் விளக்கு வெளிச்சத்தை நோக்கி வருகிறது. பூச்சிகள் விளக்கு வெளிச்சத்தை நோக்கி வர பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதில் சில முக்கிய மூன்று காரணங்களை தெரிந்து கொள்வோம்.
காரணம் 1
கலங்கரை விளக்கு வெளிச்சத்தை அடையாளமாகக் கொண்டு கப்பல்கள் வழியை கண்டு பிடிப்பது போல பூச்சிகள் நிலவின் ஒளியை அடிப்படையாக வைத்து தன்னுடைய வழியை கண்டுபிடிக்கின்றன. எனவே இரவு நேரங்களில் மின்விளக்குகள், மண்ணெண்ணெய் விளக்குகள் போன்ற விளக்குகளின் வெளிச்சத்தை பார்த்ததும் நிலவின் ஒளியாக கற்பனை செய்துகொண்டு விளக்கை நோக்கி பூச்சிகள் வருவதாக சொல்லப்படுகிறது.
காரணம் 2
ஒரு இருட்டு அறையில் இருக்கும்போது ஒரு சிறிய வெளிச்சம் தென்பட்டால் நமக்கான வழி அங்கே இருக்கிறது என நினைத்து நாம் செல்வோம். அதேபோல இரவு நேரங்களில் பூச்சிகள் விளக்கு[Light] வெளிச்சத்தை பார்த்ததும் நமக்கான வழி இங்கே இருக்கிறது என நினைத்து விளக்கு நோக்கி வருகின்றன.
காரணம் 3
இரவு நேரங்களில் பூச்சிகள் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். அதேவேளையில் பகல் பொழுதை விட இரவில் வெப்பநிலை குறைந்து காணப்படும். எனவே குளிரில் இருந்து தன்னை காத்துக் கொள்ள விளக்கு வெளிச்சத்தில் கிடைக்கும் வெப்ப நிலைக்காக வருகின்றன.
14. வயதானால் தோல் சுருங்குவது ஏன் ?
தோல் செல்கள் அழிவதால் தோலின் மீள்தன்மை [Elasticity] குறைகிறது . மேலும் தோலுக்கு(skin) அடியில் கொலஜன் (Collagen) என்ற புரதம் (Protein) இளமையில் அதிககமாக இருக்கும் இதுவே, தோல் பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்க காரணம் ஆகும்.
பின்னர் வயது ஆக ஆக இந்த புரதம்(Protein) குறைகிறது. இதனால் தோல் செல்களுக்கு இடையே உள்ள பிணைப்பு குறைந்து தோல் சுருங்குகிறது.
15. இரவில் மரங்களுக்கு அடியில் உறங்கக் கூடாது ஏன் ?
மரங்களுக்கு உயிர் உள்ளது. மரங்கள் நம்மை போல சுவாசிகின்றன. மரங்கள் பகலில் ஒளிச்சேர்க்கை நடத்துகின்றன. எனவே பகலில் ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன் -டை - ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகிறது.
ஆனான் இரவில் ஒளிச்சேர்க்கை நடைபெறாது. சுவாசம் மட்டும் நடைபெறும். மரங்களில் சுவாசம் மட்டும் நடைபெறும்போது . நம்மை போலவே ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு கார்பன் -டை - ஆக்சைடை வெளியிடும்.
அதனால் மரத்தடியில் உறங்கினால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்படும். இதன் காரணமாகத்தான் இரவில் மரத்தின் அடியில் படுத்து உறங்ககூடாது என்று பெரியவர்கள் கூறினார்கள்.
16. முடி கருப்பாக இருப்பது ஏன் ?
ரோமக் கால்கள் [Dermis] தோலின் அடிப்பகுதியில் காணப்படும் உயிர் செல்களால் ஆன ஒன்று . இந்த அடித்தோலில் தனித்தன்மை வாய்ந்த செல்கள் உள்ளன. இதற்கு மெலனோசைட் [ Melanocyte ] என்று பெயர் . இந்த செல்கள் மெலானின் [ Melanin ] என்ற நிறமியை சுரக்கிறது.
இந்த நிரமிதான் முடிக்கு கருப்பு நிறத்தை கொடுக்கிறது. தோல் கருப்பாக இருப்பதற்கும் இந்த நிரமிதான் காரணம் . நம் கண்களுக்கு தெரியும் ரோமப்பகுதி இறந்த செல்களால் ஆனதும் கடினப்பட்டதும் ஆகும்.
17. வெளிச்சத்திலிருந்து இருட்டான அறைக்கு நுழையும் போது சிறிது நேரம் கண் தெரிவதில்லை ஏன் ?
நமது கண்ணில் ஐரிஷ் ( Iris ) என்ற கருவிழி படலம் உள்ளது. இப்படலம் சுருங்கி விரியும் தன்மை உடையது. இது கண்ணின் தகவமைப்பு என்பர். வெளிச்சத்தில் இருக்கும்போது இந்த கருவிழிப் படலம் சுருங்கி விடுகிறது.
வெளிச்சத்திலிருந்து இருட்டான அழைத்துச் செல்லும்போது கருவிழிப் படலம் வெளிச்சத்திற்கு ஏற்ப விரிவடைய சில நொடிகள் ஆகும். இந்த சில நொடிகள் நமக்கு ஒரே இருட்டாக தெரியும். அப்போது எந்த பொருளும் கண்ணுக்குத் தெரிவதில்லை.
18. வளைவான பாதைகளை ஏன் உட்புறமாக சரித்து அமைக்கிறார்கள் [ Why are curved roads internally sloped?]
மைய விலக்குவிசைக்கும் வளைவுகளில் பாதை உட்புறம் சரிந்திப்பதற்கும் தொடர்புண்டு. சாலை வளைவில் செல்லும் போது பயணிகள் வெளிப்புறமாகத் தள்ளப்படுவதைப் போல மைய விலக்கு விசையால் பேருந்தும் தள்ளப்படுகிறது.
இந்த விசையானது பேருந்தின் நிறை, அதன் வேகம், வளைவின் ஆரம் ஆகியவற்றை பொருத்திரிக்கும் .இந்த மையவிக்கு விசையை ஈடு கட்டுவதற்காக பேருந்து விளைவில் செல்லும்போது அதை உட்புறமாக சரியச் செய்து அதன் எடையின் ஒரு பகுதி வளைவு மையதை நோக்கி இருக்கும்படிச் செய்கிறொம்.
சாலை வளைவுகளில் பேருந்து செல்லவெண்டிய வேகம் குறித்த எச்சரிக்கை பலகைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள் இவ்வேகத்தை மீஞ்சும் வாகனங்கள் வெளிப்புறமாக சாய்ந்து கவிழ்ந்து கிடப்பதையும் நீங்கள் சில சமயங்களில் கவனித்திருக்கலாம்.
19. வீடு கட்டும் போது செங்கல்லை நீரில் நனைத்து கட்டுவது ஏன் ?
நாம் வீடு கட்டும்போது செங்கற்களை அடுக்கி, இணைப்பு பொருளாக சிமெண்ட் கலவையை [சிமெண்ட் + மணல் + நீர்] பயன்படுத்துகிறோம். சிமெண்டும் நீரும் கலக்கும் போதுதான் வேதிவினை ஏற்பட்டு சிமெண்ட் உறுதித்தன்மையை அடையும். வெறும் சிமெண்ட் தனியாக இருந்தால் எந்த பயனும் இல்லை.
செங்கல் சூளையில் செங்கல் தயாரிக்கும் போது அதிக தீயிட்டு சுட்டு தயாரிக்கிறார்கள். இதனால்,செங்கற்கள் நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது.
எனவே வீடு கட்டும்போது செங்கற்களை நீரில் நனைக்காமல் கட்டினால்,அது சிமெண்ட் கலவையில் உள்ள நீரை உறிஞ்சிக்
கொள்ளும். இதனால் கலவையில் உள்ள நீர் குறையும்.
கலவையில் உள்ள நீர் குறையும் போது சிமெண்டின் வேதிவினை குறைந்து கலவையின் உறுதித்தன்மை குறைந்துவிடும். ஆகவே,செங்கற்களை நீரில் நனைத்து கட்டும் போது, அது கலவையில் உள்ள நீரை உறிஞ்சாது. கலவையும் முழுமையாக வேதிவினை அடைந்து கட்டிடத்தின் உறுதிதன்மையை அதிகமாக்கும்.
20. நாய் ஓடும் போது நாக்கை வெளியே தொங்கப்போட்டுக்கொண்டு ஓடுவது ஏன் ?
![]() |
Dog |
நாய் பாலூட்டி வகையை சேர்ந்த விலங்கு என்பது நாம் அறிவோம். பொதுவாக பாலூட்டிகள் வெப்ப ரத்த பிராணிகள் ஆகும். வெப்ப ரத்த பிராணிகள் தன் உடல் வெப்பநிலையை ஒரே சீராக வைத்துக்கொள்ளக் கூடிய தகவமைப்பை பெற்றவையாகும்.
குறிப்பாக கோடை காலத்தில் சுற்றுப்புறம் அதிக வெப்ப நிலையில் இருக்கும். இந்த வெப்பநிலை நம் உடல் வெப்ப நிலையை விட அதிகமாக இருக்கும். அப்போது நம் உடலில் உள்ள வியர்வை சுரப்பிகள் நன்கு வேலை செய்து வியர்வையினை வெளியேற்றும்.
உடலில் இருந்து வியர்வை வெளியேறுவதால் நம் உடல் வெப்பநிலை அதிகரிக்காமல் பாதுகாக்கப்படுகிறது.
கோடைகாலத்தில் நாய்கள் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு மூச்சுவாங்க ஓடும். அப்போது நாயின் நக்கிலிருந்து நீர் வடிந்துகொண்டே இருப்பதை நாம் பார்த்திருப்போம். இதற்க்கு முக்கியமான காரணம் நாய்க்கு வியர்வை சுரப்பிகள் உடலின் தோல் பகுதியில் இல்லை. நாய்க்கு பாதத்தில்தான் வியர்வை சுரப்பிகள் உள்ளன அதுவும் குறைவாக.
ஆகையால் உடல் வெப்பத்தை சீராக வைத்துக்கொள்ள நாக்கின் வழியாகவும்,வாய்க்குழியிலிருந்தும் நீர் வெளியேறி -சுவாசப் பாதையை ஈரமாக வைத்துக்கொள்ளும். இதன் காரணமாக நாயின் உடல் வெப்பநிலை சீராக பராமரிக்கப்படுகிரது. இதனால்தான் நாய் நாக்கை வெளியே நீட்டிக்கொண்டு ஓடுகிறது.
சாதாரணமாக நாயானது ஒரு நிமிடத்திற்கு 15 முதல் 30 தடவைசுவாசிக்கும். ஆனால் கோடைகாலங்களில் 300 தடவைக்கு மேல் சுவாசிக்கும்.
21. பேருந்தில் பயணம் செய்யும் போது படிக்கக்கூடாது ஏன் ?
பேருந்தில் செல்லும் போது படிக்கும் பொருளுக்கும் [புத்தகம்,செய்தித்தாள்,தொலைபேசி...etc], கண்லென்சுக்கும் உள்ள தூரம் அடிக்கடி மாறுபடுகிறது. இதனால் தகவமைப்பு நேரம் [Accomodation period] மாறி மாறி அழற்சியையும் தீமையையும் ஏற்படுத்துகிறது.
நாம் படிக்கும் போது வெளிச்சம் ஒரே மாதிரி இருக்க வேண்டும். ஒருவேளை வெளிச்சத்தின் அளவு மாறினால் கண்பாவையின் விட்டமும் மாறவேண்டி இருக்கும். கண்பாவையின் விட்டம் அடிக்கடி மாறினால் தலைவலி உண்டாகிறது.
எனவே பேருந்தில் பயணம் செய்யும் போது படிப்பதையோ, தொலைபேசியை பார்ப்பதையோ தவிர்ப்பது நமக்கு நல்லது.
0 Comments